மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் விடுத்துள்ள கோரிக்கையில், "பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஒப்புக்கொண்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்க்கமான பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தப் பாகிஸ்தான் தயாராக உள்ளது," எனத் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பதிவைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pakistan welcomes and fully supports ongoing efforts to pursue dialogue to end the WAR in Middle East, in the interest of peace and stability in region and beyond. Subject to concurrence by the US and Iran, Pakistan stands ready and honoured to be the host to facilitate…
— Shehbaz Sharif (@CMShehbaz) March 24, 2026
பேச்சுவார்த்தை
மறைமுகப் பேச்சுவார்த்தைகள்
நேரடிப் பேச்சுவார்த்தையை ஈரான் மறுத்து வந்தாலும், துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் திரைமறைவில் தீவிர மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் ஆகியோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
நிபந்தனை
சவால்களும் பின்னணியும்
ஈரானியத் தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தடைகளை நீக்குதல் மற்றும் அமெரிக்காவின் தலையீடற்ற நிலை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முறையான பேச்சுவார்த்தை சாத்தியம் என ஈரான் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். அதே சமயம், பாகிஸ்தான் தனது எல்லையில் ஆப்கானிஸ்தானுடன் மோதல் போக்கை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த சர்வதேச அமைதி முயற்சியில் அதன் பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.