ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை
ஈரான் நாட்டில் கடந்தாண்டு போலீஸ் காவலில் இருந்துபோது மரணம் அடைந்த 22 வயது மாஷா அமினி குறித்து, செய்தி சேகரித்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது. அமினி மரணம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட நிலௌபர் ஹமேதிக்கு 7 ஆண்டுகளும், அவரின் இறுதிச்சடங்கு குறித்து எழுதிய இலாஹே முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக அவர்கள் 20 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம். "எதிரியான அமெரிக்க அரசாங்கத்துடன் ஒத்துழைத்தல்," "தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கூட்டு சதி" மற்றும் "அமைப்புக்கு எதிரான பிரச்சாரம்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்களுக்கு செய்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த மாஷா அமினி?
மாஷா அமினி தனது ஹிஜாபை மிகவும் தளர்வாக அணிந்ததற்காக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஈரானின் அறநெறி காவல்துறையால்(மொரலிட்டி போலீஸ்) கைது செய்யப்பட்டு, காவல்துறை பாதுகாப்பில் இருந்துபோது செப்டம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை முன்பே மோசமாக இருந்ததாகவும், அதனால் மாரடைப்புட்பட்டு உயிரிழந்ததாக ஈரான் அரசு தெரிவித்தது. ஆனால் அவர் காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இது ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது ஈரான் அரசு. இதில் சுமார் 92 பேர் உயிரிழந்தனர். தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் இருவரும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.