கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்
ஈரான் 1,650 கிமீ(1,025 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று ஒரு உயர்மட்ட புரட்சிகர காவலர் தளபதி நேற்று(பிப் 24) தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு ஈரான் நிச்சயம் பழிவாங்கும் என்று அந்நாடு பலமுறை கூறி இருக்கிறது. இந்நிலையில், புரட்சிகர காவலர்களின் விண்வெளிப் படையின் தலைவரான அமிராலி ஹாஜிசாதே, "நாங்கள்(முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட்) டிரம்பைக் கொல்ல திட்டமிடுகிறோம்" என்று கூறியுள்ளார். "ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தில் 1,650 கிமீ தூரம் சென்று தாக்கும் கடற்படை ஏவுகணையும் சேர்க்கப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
டிரம்பைக் கொல்ல வேண்டும்: ஈரான் அரசு
பாக்தாத்தில் 2020இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான படைகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தபட்டது. அப்போது, "அப்பாவி வீரர்களை நாங்கள் கொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை." என்று ஹஜிசாதே கூறி இருக்கிறார். நாங்கள் டிரம்பைக் கொல்ல திட்டமிடுகிறோம். (முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்) பாம்பியோ ... மற்றும் சுலைமானியைக் கொல்ல உத்தரவு பிறப்பித்த இராணுவத் தளபதிகள் ஆகியோர் கொல்லப்பட வேண்டும்," என்று ஹஜிசாதே தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய நாடுகளின் கவலையையும் மீறி ஈரான் தனது ஏவுகணைத் திட்டத்தை, குறிப்பாக அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விரிவுபடுத்தியுள்ளது.