அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன
இந்த வார தொடக்கத்தில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு காரணமாக பெரும் போராட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா விண்ணப்ப மையங்களும், அசாதாரணமான மற்றும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விசா விண்ணப்ப மையம், அவர்களின் இணையதளத்தில், விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த தேதி SMS மூலம் தெரிவிக்கப்படும் என்றும், அடுத்த வேலை நாளில் பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முஹம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு
வியாழன் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இராணுவ ஆதரவு இடைக்கால அரசாங்கம் வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்க உள்ளது. யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியேற்பு விழாவில் பங்கு கொள்ள இன்று காலை டாக்கா வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஷேக் ஹசீனாவுக்கு ஐரோப்பிய நாட்டில் புகலிடம் அளிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் முன்னதாக தெரிவித்தன.