$5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்
இந்திய வம்சாவளி தம்பதியினரும் அவர்களது மகளும், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அவர்களது $5 மில்லியன் மாளிகையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராகேஷ் கமல், 57, அவரது மனைவி, டீனா, 54, மற்றும் அவர்களது 18 வயது மகள் அரியானா ஆகியோரின் உடல்கள் வியாழக்கிழமை மாலை 7:30 மணியளவில், டோவர் மாளிகையில் கண்டறியப்பட்டதாக, நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) மைக்கேல் மோரிஸ்ஸி தெரிவித்துள்ளார். மாசசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான போஸ்டன் நகரில் இருந்து, 20 கிலோமீட்டர் தொலைவில் டோவர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, கடைசியாக 2020ம் ஆண்டு கொலை நடைபெற்றது.
ராகேஷ் கமல் அருகில் கிடந்த துப்பாக்கி
உயிரிழந்து கிடந்த ராகேஷ் கமலுக்கு அருகில் துப்பாக்கி கிடந்ததாக தெரிவித்துள்ள மோரிஸ்ஸி, அந்த துப்பாக்கியின் உரிமம் யார் பெயரில் உள்ளது, அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்ற தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார். அதேசமயம், இந்த சம்பவமும் வெளிநபர்களால் நடந்திருக்கலாம் என்பதை மோரிஸ்ஸி மறுத்துள்ளார். ஓரிரு நாட்களாக இவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வராததால், உறவினர் ஒருவர் அவர்களைச் பார்க்க வந்தபோது அங்கு அவர்கள் உயிரிழந்திருப்பதை கண்டு, 911க்கு அழைத்ததாக மோரிஸ்ஸி கூறியுள்ளார். மேலும், ராகேஷ் கமல், மற்றும் அவரது மனைவி மீது எந்தவிதமான தவறான காவல்துறை தகவல்களும் இல்லை என, அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி?
இவர்கள் தங்கி இருந்த மாளிகை, $5.45 மில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாளிகை ஒரு வருடத்திற்கு முன்பு அவர்களின் கடனுக்காக பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதை, மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட வில்சன்டேல் அசோசியேட்ஸ் எல்எல்சி $3 மில்லியனுக்கு வாங்கியதாக, தி நியூயார்க் போஸ்ட் கூறுகிறது, மேலும், இணையத்தில் கிடைத்த சில தர தரவுகளும் அந்த குடும்பத்தினர் நிதி சிக்கல்களில் இருந்ததை காட்டுகிறது. டீனா கமல் 'எடுநோவா' என்ற நிறுவனத்தை 2017ல் தொடங்கி 2021 வரை நடத்தியதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்டு, அவரை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி வங்கிகளிடம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும், போதுமான ஆவணங்கள் இல்லாததால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.