உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!
உலக வங்கியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக நியமிப்பதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது உலக வங்கி. வரும் ஜூன் 2-ம் தேதி உலக வங்கியின் தலைவராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கும் அஜய் பங்கா, அடுத்த 5 ஆண்டுகள் அந்த அமைப்பின் தலைவராகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெனரல் அட்லான்டிகா நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கிறார் அஜய் பங்கா. 2016-ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஜய் பங்காவைப் பற்றி...
இந்தியாவின் புனேயில் பிறந்தவர் அஜய் பங்கா. டெல்லியின் செயின்ட். ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், அகமதாபாத் IIM-ல் MBA பட்டமும் பெற்றார். தொடக்க காலத்தில் நெஸ்லே மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 1996-ம் ஆண்டு சிட்டிகுழுமத்தில் இணைந்தார். அந்நிறுவத்தின் ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான சிஇஓ-வாகவும் பணியாற்றியிருக்கிறார். 2009-ல் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலராக பணியில் இணைந்த இவர், அதற்கடுத்த ஆண்டு சிஇஓ-வாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஜனவரி மாதம் ஜெனரல் அட்லான்டிகா நிறுவனத்தின் துணைத் தலைராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் பங்கா, தற்போது உலக வங்கியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவைப் பூர்வூகமாகக் கொண்ட ஒருவர் உலக வங்கியின் தலைவராவது இதுவே முதல்முறை.