'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை
ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த டபிலைஃப் பார்மாவின் ஃபோர்ட்ஸ் ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட "கோல்ட் அவுட்" என்ற இருமல் மருந்துக்கு எதிராக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டைதிலீன், எத்திலீன் கிளைகோல் போன்ற அசுத்தங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைவிட அதிகமாக இந்த மருந்துகளில் இருப்பதை உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்துள்ளது. டைதிலீன், எத்திலீன் கிளைகால் ஆகிய அசுத்தங்கள் மருந்துகளில் 0.10 சதவிகிதம் மட்டுமே இருக்கலாம். அதுவே அதன் பாதுகாப்பு வரம்பாகும். ஆனால், "கோல்ட் அவுட்" இருமல் மருந்துகளில் 0.25 சதவிகிதம் டைதிலீன் கிளைகோலும் 2.1 சதவிகிதம் எத்திலீன் கிளைகாலும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால் தொடரும் பிரச்சனைகள்
இதுவரை, இருமல் மருந்துகளின் உற்பத்தியாளர்கள் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தை உலக சுகாதார அமைப்புக்கு வழங்கவில்லை. மேலும், இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் அந்த இருமல் மருந்து நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளால் தொடர்ந்து உலகளவில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு எதிராக 5 எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்திய இருமல் மருந்துகளால் கேமரூன் நாட்டில் சில குழந்தைகள் இறந்ததை அடுத்து, இதற்கு காரணமாக இருந்த மத்திய பிரதேசத்தின் ரீமான் லேப்ஸ் என்ற நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்பு முற்றிலுமாக கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.