சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று(மார் 19) லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த இந்திய கொடியை கைப்பற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலும் நடந்திருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள், சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்தில் இருந்த இந்திய கொடியை கைப்பற்றியது மட்டுமல்லாமல் தூதரகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் உரத்த பஞ்சாபி இசை ஒன்று ஒலித்து கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது.
"அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் எழுதப்பட்டிருந்தது
மேலும், அவர்கள் தூதரகத்தின் வெளிப்புறச் சுவரில் "அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் பெரிதாக எழுதியுள்ளனர். அமிரித்பால் சிங் என்பவர் காலிஸ்தான் ஆதரவு தலைவராவார். இவரை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற குறிக்கோளோடு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தூதரக கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை காலிஸ்தான் கொடிகளால் உடைத்த ஆதரவாளர்களின் கைகளில் காலிஸ்தான் கொடிகள், வாள் போன்றவை இருந்தன. மேலும், பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறை நடத்திய "அடக்குமுறைக்கு" எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று போராடினர்.