காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று(மார் 20) டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மூவர்ணக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியபடி, "இந்தியா நமது பெருமை" என்ற முழக்கத்தை எழுப்பிய போராட்டக்காரர்கள், தேசியக் கொடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று(மார் 19) லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த இந்திய கொடியை கைப்பற்றினர். காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது.
இந்திய கொடி தற்போது பிரமாண்டமாக பறந்து கொண்டிருக்கிறது: அதிகாரிகள்
காலிஸ்தான் ஆதரவாளர்களின் முயற்சி தோல்வியடைந்தது என்றும் இந்திய கொடி தற்போது பிரமாண்டமாக பறந்து கொண்டிருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு பாதுகாப்பு ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்திய தூதரகத்தின் பாதுகாப்பிற்கு இங்கிலாந்து அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ், "பொதுவாக்கெடுப்பு 2020" என்பதற்கான அழைப்பை விடுத்துள்ளது.