பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை
சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததால் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை பயங்கரவாத விசாரணையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஏழு உதவியாளர்களை விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், நம்பர் 1 குற்றவாளியாக காலிஸ்தான் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அம்ரித்பால் சிங்கின் முக்கிய உதவியாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அசாமில் உள்ள திப்ருகாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து எடுத்திருக்கும் ரகசிய நடவடிக்கைகள்
அந்த நான்கு பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள எந்தச் சிறையிலும் சந்தேக நபர்களை காவலில் வைக்க காவல்துறையை அனுமதிக்கும். பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசு மற்றும் அசாமை ஆளும் பாஜக காட்சி ஆகியவை இணைந்து நடத்தும் மிக ரகசியமான நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல இந்திய விமானப்படை விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, இந்த விஷயத்தில் மத்திய அரசு கொண்டிருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது. இதுவரை, அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 112 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 'வாரிஸ் பஞ்சாப் டி' குழுவைச் சேர்ந்த பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.