உலக புத்திசாலிகளின் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பிடித்த அமெரிக்க-தமிழ் சிறுமி
76 நாடுகளில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவு திறனை சோதித்து பார்த்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் முடிவுகளின் அடிப்படையில், அமெரிக்க-தமிழ் சிறுமி நடாஷா பெரியநாயகம் உலக புத்திசாலிகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார். நடாஷா பெரியநாயகம்(13) நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கிரேடு 5இல் படித்து கொண்டிருந்த போது, 2021ஆம் ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சென்டர் ஃபார் டேலண்டட் யூத்(CTY) தேர்விலும் கலந்து கொண்டார். வாய்மொழி மற்றும் கணக்கு பிரிவுகளில், கிரேடு 8க்கான திறன் தேர்வுகளில் அவர் 90 சதவீத மதிப்பெண் பெற்றிந்தார். இது அவரை அந்த ஆண்டு கௌரவப் பட்டியலில் சேர்த்தது.
தேர்விலேயே அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் பெண்
இந்த ஆண்டு, SAT, ACT, பள்ளி மற்றும் கல்லூரி திறன் தேர்வு அல்லது CTY திறமை தேடலின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்று பல்கலைக்கழகம் நேற்று(பிப் 6) ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தன் ஓய்வு நேரங்களில் ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் நாவல்களை படிப்பது பிடிக்கும் என்று கூறிய நடாஷா பெரியநாயகத்தின் பெற்றோர் சென்னையில் இருந்து அமெரிக்க சென்றவர்கள் ஆவர். பல்கலைக்கழக வெளியீட்டின்படி, 2021-22 ஆண்டில் திறமை தேடல் CTY இல் பங்கேற்ற 76 நாடுகளைச் சேர்ந்த 15,300 மாணவர்களில் பெரியநாயகமும் ஒருவர் ஆவார். அந்த பங்கேற்பாளர்களில் 27 சதவீதத்திற்கும் குறைவானவர்களே CTY விழாவிற்கு தகுதி பெற்றுள்ளனர். பங்கேற்றவர்களிலேயே நடாஷா தான் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.