கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. கனேடிய தேர்தல்களில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் தலையீடுகளை பற்றி ஆராயும் பெடரல் விசாரணை ஆணையத்தின் ஒரு பகுதியாக, இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளது கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை(CSIS). இது குறித்து கடந்த பிப்ரவரியிலேயே இந்தியா அரசாங்கம் பதிலளித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என கூறியது மட்டுமின்றி, புதுதில்லியின் உள்விவகாரங்களில் ஒட்டாவாவின் தலையீடுதான் முக்கியப் பிரச்சினை என்றும் அப்போது வலியுறுத்தியது. "மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவது இந்திய அரசின் கொள்கையல்ல. உண்மையில், தலைகீழாக, கனடா தான் எங்களின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது," என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
CSIS அறிக்கை என்ன சொன்னது?
2021ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், கனடாவில் இந்திய அரசாங்கப் பதிலாள் முகவரைப் பயன்படுத்துவது உட்பட, தேர்தலில் தலையிடும் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்று CSIS ஆவணங்களில் குற்றம் சாட்டியுள்ளது. "இந்தோ-கனடிய வாக்காளர்களில் ஒரு பகுதியினர் காலிஸ்தானி இயக்கம் அல்லது பாகிஸ்தான் சார்பு அரசியல் நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்டவர்கள்" என்ற கருத்து இந்தியாவிற்கு இருந்ததால், இந்திய அரசாங்கம் அவர்களை குறிவைக்குமென CSIS ஆவணம் கூறியது. இந்திய சார்பு வேட்பாளர்களுக்கு சட்டவிரோத நிதி உதவியை வழங்குவதன் மூலம், இந்திய அரசாங்கத்தின் ப்ராக்ஸி முகவர், ஜனநாயக செயல்முறைகளில் தலையிட முயற்சித்திருக்கலாம் என அந்த ஆவணம் கூறுகிறது. எவ்வாறாயினும், CSIS அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைகளாக கருதப்படக்கூடாது என்றும் மேலும் விசாரணை தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.