இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?
இந்தியா மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அலுவலக ஆலோசனை (எஃப்ஓசி) கட்டமைப்பின் கீழ் டாக்காவில் டிசம்பரில் வெளியுறவு செயலாளர் அளவிலான கலந்துரையாடல்களை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நடத்த உள்ளன. இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாஷிம் உதின் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் உறுதிப்படுத்தினார். முன்னதாக, பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பதட்டமாக உள்ள பல்வேறு இருதரப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதும், உறவுகளை சீராக்குவதும் இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாக உள்ளது.
பங்களாதேஷ் அரசியல் சிக்கல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்போது, ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா பாதுகாப்புக்காக இந்தியாவுக்குத் தப்பி வந்தார். இஸ்லாமியவாத மற்றும் பாகிஸ்தான் சார்பு அமைப்புகளால் நடத்தப்பட்ட அந்த போராட்டத்தின் முடிவில், இராணுவ ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்ட்டது. முகமது யூனுஸ் ஆட்சியின் கீழ், பங்களாதேஷ் அரசியல் மற்றும் மதவெறி வன்முறைகளை அதிகம் கண்டு வருகிறது. இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அல்-கொய்தாவின் துணை அமைப்பான ஜாஷிமுதீன் ரஹ்மானி ஹபி உட்பட இஸ்லாமியத் தலைவர்களின் விடுதலை இந்தியாவுடனான உறவை மேலும் சீர்குலைத்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை
ஷேக் ஹசீனா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்ட வழக்குகளை மேற்கோள் காட்டி, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவுக்கும் பங்களாதேஷ் அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் பேச்சுவார்த்தையில் நாடு கடத்தல் கோரிக்கை பங்களாதேஷ் தரப்பால் பிரதானமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியா தரப்பில் அந்நாட்டில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கவலைகள் முன்வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு பிரச்சினைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இருதரப்பு அதிகாரிகளும் மேற்கொள்ளும் இந்த சந்திப்பின் மூலம், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் அரசியல் பதற்றம் சற்று தணியலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்துகின்றனர்.