ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் புதுமணப் பெண் ஒருவர் அவரது தந்தையால் நேற்று(ஜன 23) சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கராச்சியில் உள்ள பிரபாத்தில் வசிக்கும் பெண், தான் "சுதந்திரமான" திருமணத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக கராச்சி நகர நீதிமன்றத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதுடன் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறியுள்ளார். பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இந்த பெண், சமீபத்தில் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் கெளரவம் என்ற பெயரில் கொல்லப்படும் பெண்கள்
"இன்று(ஜன 23) காலை அவர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நகர நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரது தந்தை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்" என்று போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறி இருக்கிறார். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கௌரவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றனர். "ஒவ்வொரு வழக்கின்போதும், தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஏதாவது ஒரு ஆண் உறவினர் தான் ஆணவ கொலையின் பின்னணியில் உள்ளனர்" என்று சேதர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை மட்டும் 640ஐ தாண்டும் என்கிறது அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம்