ஐடி பணிநீக்கம்: அமெரிக்காவில் வேலை விசா பிரச்சனையால் சமாளிக்க முடியாமல் திண்டாடும் இந்தியர்கள்
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நடைபெற்ற சமீபத்திய ஆட்குறைப்பு பணி நீக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை விசாவில் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கும் இவர்கள், விசாவின் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்குள் அடுத்த வேலையை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள். தி வாஷிங்டன் போஸ்ட்டின் செய்திகளின் படி, கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கிட்டத்தட்ட 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் H-1B மற்றும் L1 விசா வைத்திருப்பவர்கள் ஆவர்.
H-1B மற்றும் L1 விசா வைத்திருப்பவர்களின் திண்டாட்டம்
H-1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்களுக்கு வழங்கும் விசாவாகும். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவை நம்பியுள்ளன. L-1A மற்றும் L-1B விசாக்கள் நிர்வாக பதவிகளில் பணிபுரியும் அல்லது நிபுணத்துவ அறிவைக் கொண்ட உள்-நிறுவனத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபடுபவர்களுக்கு கிடைக்கும் விசாக்கள் ஆகும். இந்த விசாக்களில் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்த ஆயிரக்கணக்கானோர் தற்போது வேலையின்மையாலும் விசா பிரச்சனைகளாலும் திண்டாடி வருவதாக செய்திகள் கூறுகின்றன.