Page Loader
கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்
இது தொடர்பாக இரு சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்

எழுதியவர் Sindhuja SM
Apr 06, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சரில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று வின்ட்சர் காவல்துறை தெரிவித்துள்ளது. வெறுப்பால் தூண்டப்பட்ட சம்பவம் என்ற அடிப்படையில் வின்ட்சர் போலீஸார் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக இரு சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். "ஏப்ரல் 5, 2023 அன்று, காழ்புணர்ச்சியால் கோவில் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நார்த்வே அவென்யூவின் 1700 பிளாக்கில் உள்ள ஒரு இந்து கோயிலுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் கறுப்பு நிறத்தில் இந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்." என்று வின்ட்சர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா

சிசிடிவி காட்சிகளை காப்பாற்றிய காவல்துறையினர்

மேலும், சம்பவம் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். "சம்பவத்தின் போது, ​​ஒரு சந்தேக நபர் கருப்பு ஸ்வெட்டர், இடது காலில் சிறிய வெள்ளை லோகோவுடனான கருப்பு பேன்ட் , கருப்பு மற்றும் வெள்ளை ஷூக்களை அணிந்திருந்தார். இரண்டாவது சந்தேக நபர் கருப்பு பேன்ட், ஸ்வெட்ஷர்ட், கருப்பு காலணிகள் மற்றும் வெள்ளை சாக்ஸ் அணிந்திருந்தார்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அதன் பிறகு எங்கே சென்றார்கள் என்பதை அறிய, அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்த்துறையினர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.