உலகின் மகிழ்ச்சியான பாஸ்போர்ட் குறியீடு 2026: பின்லாந்து முதலிடம்; டாப் 10 பட்டியலில் 8 ஐரோப்பிய நாடுகள்
செய்தி முன்னோட்டம்
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மதிப்பு என்பது விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இதுவரை கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், அந்த பாஸ்போர்ட்டை வழங்கும் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கிடும் புதிய 'Happy Passports Index 2026' வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் உலகின் 50 நாடுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், பின்லாந்து 93.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
மதிப்பெண்
எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது?
இந்தக் குறியீட்டில் 50 நாடுகளுக்கும் 100 மதிப்பெண்களுக்கு கீழ்க்கண்ட 4 முக்கியத் தூண்களின் அடிப்படையில் சமமான முக்கியத்துவம் அளித்துத் தரவரிசை வழங்கப்பட்டுள்ளது:
நல்வாழ்வு: உலக மகிழ்ச்சி அறிக்கையின் அடிப்படையிலான வாழ்க்கை திருப்தி மதிப்பெண்கள்.
சொந்த நாட்டில் சுதந்திரம்: தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் மற்றும் குடிமை உரிமைகள்.
பயணச் சுதந்திரம்: பாஸ்போர்ட் மூலம் விசா இன்றி பயணிக்கும் வசதி.
செழிப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு: தனிநபர் வருமானம், ஆரோக்கியமான ஆயுட்காலம் மற்றும் உலகளாவிய அமைதி குறியீடு.
டாப் 10
உலகின் டாப் 10 மகிழ்ச்சியான பாஸ்போர்ட் நாடுகள்
இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களை நார்டிக் நாடுகள் கைப்பற்றியுள்ளன.
டாப் 10 இடங்களில் 8 ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பாவிற்கு வெளியே நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
பின்லாந்து: 93.2
ஐஸ்லாந்து: 92.4
டென்மார்க்: 92.1
நார்வே: 89.3
சுவிட்சர்லாந்து: 88.3
சுவீடன்: 88.2
நெதர்லாந்து: 86.2
நியூசிலாந்து: 84.4
ஆஸ்திரியா: 83.8
சிங்கப்பூர்: 82.8
முக்கியத் தகவல்
வலுவான பாஸ்போர்ட் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை!
செல்வந்த நாடுகளில், பாஸ்போர்ட் வலிமை அல்லது வருமானத்தை விட, தனிப்பட்ட விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமே வாழ்க்கை திருப்தியுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஜப்பான், மால்டா, போர்ச்சுகல், சைப்ரஸ், மலேசியா, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் வலுவான பாஸ்போர்ட் மற்றும் ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டாலும், அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சி அளவு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர் பயணச் சுதந்திரம் மற்றும் வருமானத்தில் முதலிடத்தில் இருந்தாலும், நல்வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகிய பிரிவுகளில் பின்தங்கியதால் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.