இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு
இந்தியாவும் பிரான்சும் இணைந்து கூட்டாக போர் விமான இயந்திரத்தை உருவாக்கப்போவதாக நேற்று(ஜூலை 14) அறிவித்தன. இது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முடிவாகும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பிரெஞ்சு விமான நிறுவனமான சஃப்ரான் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO) ஆகியவை இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த கூட்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கான திட்ட வரைபடத்தை உருவாக்க உள்ளன. மேலும், பிரான்ஸின் சஃப்ரான் ஹெலிகாப்டர் எஞ்சினின் உதவியுடன் இந்திய மல்டி ரோல் ஹெலிகாப்டர் திட்டத்தின்(IMRH) கீழ் ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர்களை மோட்டார்மயமாக்கலுக்கான தொழில்துறை ஒத்துழைப்பிலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் சின்னம்
"IMRH திட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) மற்றும் பிரான்சின் சஃப்ரான் ஹெலிகாப்டர் இன்ஜின் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது." என்று அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 26 ரஃபேல்-எம் கடற்படை போர் விமானங்கள் கொள்முதல் பற்றி இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்திய விமானப் படைக்காக(IAF) இந்திய அரசாங்கம் வாங்கிய 36 ரஃபேல் போர் விமானங்களின் "சரியான டெலிவரி" பற்றி மட்டுமே இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது பிரதமர் மோடி, "இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் சின்னமாகும்" என்று கூறினார்.