பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்
காசா பகுதி மீது குண்டு வீசுவதையும், அங்கு வாழும் பொதுமக்களைக் கொல்வதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இஸ்ரேல் நடத்தும் வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த நியாயமும்கூறி விட முடியாது என்று கூறிய அவர், போரை நிறுத்துவது தான் இஸ்ரேலுக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார். "ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை பிரான்ஸ் கண்டிக்கிறது. ஆனால் இஸ்ரேலின் தற்காத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், காசாவில் நடக்கும் குண்டுவெடிப்பை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்." என்று மக்ரோன் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பிற நாட்டின் தலைவர்களும் போர்நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமா என்று கேட்டதற்கு "அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.
'உலகத் தலைவர்கள் ஹமாஸை தான் கண்டிக்க வேண்டும்': இஸ்ரேல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பரிதாபமாக உயிரிழந்த பாலஸ்தீனர்களில் 3இல் 2 பங்கினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கேட்டு கொண்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் கருத்துகளுக்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலகத் தலைவர்கள் ஹமாஸைக் கண்டிக்க வேண்டும், இஸ்ரேலை அல்ல என்று கூறியுள்ளார்.
'காசாவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க இஸ்ரேல் முயல்கிறது': இஸ்ரேல்
"காசாவில் இன்று ஹமாஸ் செய்யும் இந்த குற்றங்கள் நாளை பாரிஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலும் செய்யலாம்." என்று கூறிய பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தினால் அது சரணடைவதற்கு சமம். பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளுக்கு காரணம் ஹமாஸ் தான், இஸ்ரேல் இல்லை." என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை, ஆனால் அதற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க முயல்கிறது என்று நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு தினமும் 4 மணிநேரத்திற்கு மட்டும் போர் இடை நிறுத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.