பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை
பிரான்சின் மதச்சார்பற்ற கல்விமுறை சட்டங்களை மீறுவதால், பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் அபயா உடை அணிவதை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்ய உள்ளனர். அபயா என்பது ஹிஜாப்புடன் அணியப்படும் புர்கா போன்ற இஸ்லாமிய உடையாகும். "இனிமேல் பள்ளிகளில் அபாயா அணிவது சாத்தியமில்லை" என்று கூறிய பிரான்சின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல், செப்டம்பர் 4 முதல் நாடு முழுவதும் இதற்கான விதிகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பள்ளிகளில் பெண்கள் அபயா அணிவது குறித்து பல மாதங்களாக நடந்த விவாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியரசின் கொள்கைகளை பாதிக்கும் மாணவிகளின் அபயா
ஏற்கனவே, பிரெஞ்சு பள்ளிகளில், பெண்கள் இஸ்லாமிய முக்காடுகளை அணிவதற்கு நீண்ட காலமாக தடை அமலில் இருக்கிறது. பிரான்சில் உள்ள வலது மற்றும் தீவிர வலதுசாரிகள் இதற்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இது சிவில் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை மீறும் என்று இடதுசாரிகள் கூறி வருகின்றனர். பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா அணிவது அதிகரித்து வருவதாகவும், இதனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிகளுக்குள் மத அடிப்படையிலான அடையாளங்களை அனுமதிப்பது, பள்ளிகளின் மதசார்பற்ற தன்மையை மட்டுமல்லாமல், குடியரசின் கொள்கைகளையும் பாதிக்கிறது என்று பிரான்சின் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.