இரண்டு உலகப் போர்களைத் தாங்கி நின்ற கட்டிடம் சாம்பலானது! பிரான்சில் வெடித்த உச்சகட்ட போராட்டம்
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் நாட்டில் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறை கும்பல், லிமோஜஸ் நகரில் உள்ள 143 ஆண்டுகள் பழமையான நகர மண்டப கட்டிடத்திற்கு தீவைத்துக் கொளுத்தியுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர் 17) இரவு முகமூடி அணிந்த நபர்கள் சிலர் கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்து உள்ளே நுழைந்து இந்த தீ வைப்புச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இரண்டு உலகப் போர்களையும் கடந்து பிரான்சின் வரலாற்று சின்னமாக விளங்கிய இக்கட்டிடம் தீயில் எரிந்து சேதமடைந்தது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் போராட்டம்
பிரான்ஸ் முழுவதும் தீவிரமடையும் மக்கள் போராட்டம்
பிரான்சில் அதிபர் எமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
உள்துறை அமைச்சகத்தின் கணக்குப்படி நாடு முழுவதும் 5,50,000 பேரும், தொழிற்சங்கங்களின் கணக்குப்படி 8,00,000 பேரைக் கடந்தும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தலைநகர் பாரிஸ், மார்சேய், நைஸ், போர்டோ மற்றும் லீல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
கைது
கடைகள் சூறையாடல் மற்றும் 1,200 பேர் கைது
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் அங்கிருந்த சொகுசுக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் மின்னணு சாதன கடைகளை சூறையாடியுள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இச்சம்பவங்களில் இதுவரை 1,200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரெஞ்சு அதிபர் எச்சரித்துள்ளார்.
1787 முழக்கம்
அரசியல் ஸ்திரமின்மை மற்றும் 1789 புரட்சி முழக்கங்கள்
பிரான்சில் இன்னும் ஆறு மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இத்தகைய தீவிர வன்முறை வெடித்துள்ளது நாட்டின் அரசியல் சூழலை பெரிதும் பாதித்துள்ளது.
1789-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியை நினைவூட்டும் வகையில் 'பிரான்ஸ் மக்கள் மீண்டும் புரட்சியில் இறங்கியுள்ளனர்' என்ற முழக்கங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு உயர்ந்து கொண்டே செல்வதால், பொதுமக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் அரசுக்கு எதிரான அழுத்தங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.