பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்
ஞாயிற்றுக்கிழமை காலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய நகரமான, மராவியில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பில் 42 நபர்களுக்கு பெரும்பாலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் தௌலா இஸ்லாமியா-மௌட் குழு இருக்கலாம் என, அப்பிராந்தியத்தின் காவல்துறை கமாண்டர் பிரிக் ஜெனரல் ஆலன் நோப்லேசா கூறினார். அருகிலுள்ள டத்து ஹோஃபர் அம்பட்டுவான் நகரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் ராணுவத்துடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 மௌட் குழுவினர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு அதற்கு எதிர்வணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
குண்டுவெடிப்புக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கண்டனம்
இந்த குண்டு குண்டு வெடிப்பை "அறிவற்றது மற்றும் மிகவும் கொடூரமானது" எனவும், இது "வெளிநாட்டு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது" எனவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார். மேலும், இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதி அளித்த ஜனாதிபதி, மக்களை அமைதி காக்க வலியுறுத்தினார். ஒரு கையெறி குண்டு அல்லது மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு, இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் தினத்திற்கான நான்கு வார விழிப்பு விழாவான அட்வென்ட்டின் தொடக்கமாக பிலிப்பைன்ஸ் முழுவதும், இன்று வழக்கத்தை விட அதிகமானோர் பிரார்த்தனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடரும் கிளர்ச்சிகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பல வருடங்களாக பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, பல இஸ்லாமிய போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நகரம் ஐஎஸ் அமைப்புடன் இணைந்த, இஸ்லாமிய போராளிகளால் முற்றுகையிடப்பட்டது. பின்னர், ராணுவம் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 113 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில், 80% அதிகமானோர் கத்தோலிக்கர்களாக உள்ளனர். இந்நாட்டின் தெற்கு பகுதி சிறுபான்மை முஸ்லிம்களின் தாயகமாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்பட்டு அமைதியற்ற நிலைமை நிலவி வந்தது.