இந்தியாவை விட்டு வெளியேறிய 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார் லலித் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான லலித் மோடி, பிரிட்டிஷ் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். நிதி முறைகேடு புகார்கள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிச் சுமார் 16 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வரும் அவர், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியன் அமைப்பில் உரையாற்றும்போது இந்தத் தகவலை வெளியிட்டார். கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தனக்கு முறைப்படி பிரிட்டிஷ் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும், மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாளையொட்டி இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிழ்ச்சி
லலித் மோடியின் நெகிழ்ச்சியான பதிவு
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ள லலித் மோடி, "பல ஆண்டுகளாக பிரிட்டன் எனது இல்லமாக இருந்து வருகிறது.
இந்நாட்டின் மக்கள், அமைப்புகள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளை நான் மிகவும் நேசிக்கிறேன். பிரிட்டிஷ் குடிமகனாக மாறுவது ஒரு பெருமை மற்றும் பொறுப்பு; இதை நான் நன்றியுடனும், சொந்த மண்ணுக்குரிய உணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரிட்டனில் நடைபெற்ற குடியுரிமை வழங்கும் விழாவில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இத்தருணத்தைக் கொண்டாடியதாகவும், தான் பெருமையுடன் தாயகம் என அழைக்கும் இந்நாட்டிற்குத் தொடர்ந்து நேர்மறையான பங்களிப்பை வழங்க எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விளக்கம்
நிதி முறைகேடு புகார்களும் விளக்கமும்
2010-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்தார்.
ஏல முறைகேடு, பணமோசடி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அவர் மீது விசாரணை நடத்தி வருகிறது.
இருப்பினும், தன்னை ஒரு 'தப்பியோடிய குற்றவாளி' எனக் கூறுவதைத் தொடர்ந்து மறுத்து வரும் லலித் மோடி, "நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, உலகம் முழுவதும் சுதந்திரமாகப் பயணிக்கிறேன். இதுவரை என் மீது எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை" என அண்மையில் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.