'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு
செய்தி முன்னோட்டம்
தெற்கு காசா பகுதியில் ஏற்கனவே நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை மாற்ற கட்டாயப்படுத்துவது "மரண தண்டனைக்கு சமம்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை, நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசித் தாக்கி, குறைந்தது 600 குழந்தைகள் உட்பட 1,900 பேரைக் கொன்றது.
இதனையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.
இந்நிலையில், ஹமாஸுக்கு எதிராக தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு முன், வடக்கு காசாவை காலி செய்யுமாறு பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
கிக்
இஸ்ரேலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம்
இந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.
"வடக்கு காசாவில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் 22 மருத்துவமனைகளை காலி செய்ய வேண்டும் என்ற இஸ்ரேலின் தொடர்ச்சியான உத்தரவுகளை WHO கடுமையாக கண்டிக்கிறது" என்று UN சுகாதார நிறுவனமான உலக சுகாதார அமைப்பு(WHO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"நோயாளிகள் மற்றும் சுகாதார பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது தற்போதைய மனிதாபிமான மற்றும் பொது சுகாதார பேரழிவை மேலும் மோசமாக்கும். தெற்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அங்கு 2,000 நோயாளிகளை மாற்றுவது, மரண தண்டனைக்கு சமம்." என்று உலக சுகாதார அமைப்பு(WHO) கூறியுள்ளது.