உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து 6வது நாளான இன்றும் நடக்கிறது.
இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் காஸாவின் நிலை படுமோசமடைந்துள்ளது.
ஹமாஸ் படையினரும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, காஸாவில் நேற்று(அக்.,11)எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின் உற்பத்தி நிலையம் முடங்கியது.
இதன் காரணமாக காஸா இருளில் மூழ்கியுள்ளது.
இதனால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் போன்களை சார்ஜ் செய்ய கார் பேட்டரிகளை பயன்படுத்தும் வீடியோப்பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக எரிபொருள், மின்சாரம், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எதுவும் காஸாவிற்கு எடுத்துச்செல்ல கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்தது குறிப்பிடவேண்டியவை.
இந்நிலையில் காஸாவில் மின்சாரம் தடைபட்ட காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
போர்
தொடர் குண்டு வெடிப்பால் இரவு முழுவதும் பயத்தில் கழித்த குடும்பம்
இதனைத்தொடர்ந்து காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவப்பொருட்களும் தீர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உணவு பற்றாக்குறை காரணமாக அப்பகுதி மக்கள், கேனில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் இதரப்பொருட்களை கடைகளிலிருந்து விரைந்து வாங்கி சேமித்து வைப்பதால், கடைகளிலுள்ள இருப்பும் காலியாகி வருகிறது.
அப்பகுதியில் அமைந்துள்ள ஒரேயொரு இறைச்சிக்கடையும் மூடப்பட்டுள்ளது.
எல்லையோரம் விளையும் காய்கறிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லமுடியாமல் தனது குடும்பத்துடன் இரவு முழுவதும் பயத்தில் கழித்ததாக காஸாவில் வசிக்கும் மஸேன் முகமது(38)என்பவர் கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில் அங்குள்ள குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடம் எங்குமில்லை என்னும் நிலை தான் நிலவி வருகிறது.