50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெள்ளத்தால், பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. தென்கிழக்கு மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவன பகுதி உலகின் மிகவும் வறண்ட இடங்களில் ஒன்றாகும். மேலும் கோடையின் பிற்பகுதியில் இங்கு மழை அரிதாகவே பெய்யும். இந்நிலையில், மொராக்கோ அரசாங்கம் செப்டம்பரில் இரண்டு நாட்கள் பெய்த மழைப்பொழிவு ஆண்டு முழுவதும் மொத்தமாக 250 மில்லிமீட்டருக்கும் குறைவாகக் காணும் பல பகுதிகளில் ஆண்டு சராசரியை விட அதிகமாகப் பெய்ததாகக் கூறியது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு
இந்த மழை வெள்ளத்தால், பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள டாடா நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரபாத்திற்கு தெற்கே சுமார் 450 கிலோமீட்டர்கள் (280 மைல்) தொலைவில் உள்ள டகோனைட்டில் 100 மில்லிமீட்டர்கள் (3.9 அங்குலம்) மழை 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஜாகோராவுக்கும் டாடாவுக்கும் இடையே உள்ள புகழ்பெற்ற ஏரியான இரிக்கி ஏரி இந்த வெள்ளத்தால் விரைவாக நிரம்பி வருவதை நாசா செயற்கைக்கோள் காட்டியது. 30 முதல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளதாக மொராக்கோவின் வானிலை ஆய்வுக்கான பொது இயக்குநரகத்தின் ஹவுசின் யூபெப் கூறினார்.