அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டிரம்பிற்கு பரிந்துரைத்தது.
அதன் தொடர்ச்சியாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிடுவதை தற்காலிகமாக தடுத்து உத்தரவிட்டார், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி.
நேற்று வியாழக்கிழமை, மாவட்ட நீதிபதி வில்லியம் அல்சுப், தகுதிகாண் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமானது என்று கூறினார்.
அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகத்திற்கு (OPM) கூட்டாட்சி நிறுவனங்களில் உள்ள எந்தவொரு தொழிலாளியையும் பணியமர்த் தவோ அல்லது பணிநீக்கம் செய்யவோ அதிகாரம் இல்லை எனக்கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணிக்கு நிவாரணம் வழங்கியது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம்.
வழக்கு
தொடர் பணி நீக்கங்களில் ஈடுபட்டுள்ள டிரம்ப் நிர்வாகம்
ஐந்து தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஐந்து இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த புகாரானது, கூட்டாட்சி பணியாளர்களை பெருமளவில் குறைக்கும் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தடுக்கும் பல வழக்குகளில் ஒன்றாகும்.
ஆயிரக்கணக்கான தகுதிகாண் ஊழியர்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக ஒரு வருடத்திற்கும் குறைவாகப் பணியில் இருக்கும் தகுதிகாண் தொழிலாளர்களின் வேலைகளை நிறுத்துவதற்கு பணியாளர் மேலாண்மை அலுவலகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிகள் கூறுகின்றனர்.
தொழிலாளர்களின் மோசமான செயல்திறன் என்ற பொய் காரணம் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
மத்திய அரசு நிறுவனங்களில் சுமார் 200,000 தகுதிகாண் தொழிலாளர்கள் உள்ளனர்.
கலிபோர்னியாவில் சுமார் 15,000 பேர் பணிபுரிகின்றனர், தீ தடுப்பு முதல் முன்னாள் படைவீரர் பராமரிப்பு வரை சேவைகளை வழங்குகிறார்கள்.