டொனால்ட் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டவரின் புகைப்படம் வெளியீடு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை விசாரிக்கும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI), இந்த தாக்குதலை "உள்நாட்டு பயங்கரவாதம்" என்று குறிப்பிட்டுள்ளது. டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்(20) ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்தவர் ஆவார். பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியின் போது உரையாற்றிக் கொண்டிருந்த டிரம்ப் மீது அவர் எட்டு ரவுண்டு தோட்டாக்களை சுட்டார். அந்த தோட்டங்களில் ஒன்று குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்பின் வலது காதில் காயத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை FBI இன்னும் அடையாளம் காணவில்லை.
நேரில் பார்த்த சாட்சிகள் கூறிய குற்றச்சாட்டு
தாக்குதல் நடத்திய இளம் நபரின் புகைப்படத்தை FBI தற்போது வெளியிட்டுள்ளது. அந்த 20 வயது இளைஞன் கண்ணாடி அணிந்து கொண்டு கேமராவை பார்த்து புன்னகைப்பதை அந்த படம் காட்டுகிறது. தேர்தல் பேரணி நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கூரையில் நின்று கொண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பல முறை துப்பாக்கியால் சுட்ட குரூக்ஸ், ரகசிய சேவை ஸ்னைப்பர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவம் நடப்பதற்கு முன்பே, ஒரு நபர் துப்பாக்கியுடன் கூரைக்கு மேல் நிற்பதை அந்த பேரணியில் இருந்த பலர் கண்டதாகவும், அது குறித்து பாதுகாப்பு படையினரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.