போலி வேலைவாய்ப்புகள் மூலம் அமெரிக்க ரகசியங்களை திருட சீனா சதி: 13 இணையதளங்களை முடக்கிய FBI
செய்தி முன்னோட்டம்
என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் மற்றும் சீன உளவாளியாக கருதப்படும் ஆலிஸ் ஹுவாங் தொடர்பான சர்ச்சை வெடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே, சீன உளவாளிகளின் பெரிய சதியை அமெரிக்காவின் FBI முறியடித்துள்ளது. கடந்த ஜூன் 2026-இல், சீன ஏஜென்ட்களால் நடத்தப்பட்ட சுமார் 13 போலி இணையதளங்களை எஃப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக முடக்கினர். போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள், போலியான ஆலோசனை நிறுவனங்கள் மூலம் அமெரிக்க அரசு மற்றும் ராணுவத்தின் ரகசியத் தகவல்களைத் திருட முயன்றது இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஏஐ வலை
வேலையிழந்த அமெரிக்க ஊழியர்களுக்கு விரிக்கப்பட்ட ஏஐ வலை
அமெரிக்க நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அனுமதி பெற்ற நபர்களைக் குறிவைத்தே இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
போலி அடையாளங்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு, ஆராய்ச்சி அறிக்கைகளுக்காக பெரும் தொகையை வழங்கி ரகசியத் தகவல்களை பெற முயன்றுள்ளனர்.
முடக்கப்பட்ட 13 இணையதளங்கள் வெறும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்றும், இதேபோன்ற 100-க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர் மேக்ஸ் லெஸ்ஸர் எச்சரித்துள்ளார்.
சீனா
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த உளவு குற்றச்சாட்டுகளைச் சீன அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆலிஸ் ஹுவாங் தொடர்பான சர்ச்சை மற்றும் எஃப்.பி.ஐ நடவடிக்கை குறித்துப் பதிலளித்த சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், எந்த ஆதாரமும் இல்லாத ஊகங்களின் அடிப்படையில் சீனாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க அமெரிக்கா முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகமும் இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட அவதூறு எனத் தெரிவித்துள்ளது.