ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. புதன்கிழமை(மார் 29) ஒரு அறிக்கையில், ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" ராகுல் காந்தியின் வழக்கில் பின்பற்றப்படுவதை ஜெர்மனி எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி விவகாரம் குறித்து பேசும் முதல் ஐரோப்பிய நாடு ஜெர்மனி ஆகும். ராகுல் காந்திக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஆகிய விஷயங்களை ஜெர்மன் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என்று ஜெர்மன் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.
வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: கிரண் ரிஜிஜு
இருப்பினும், ராகுல் காந்தி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து "மேல்முறையீடு செய்யலாம்" என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது. மேலும், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஏதேனும் அடிப்படை காரணம் உள்ளதா என்பதைப் ஆராய வேண்டும் என்றும் ஜெர்மனி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பின் போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஜெர்மனியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கூறினார். "வெளிநாட்டு தலையீட்டால் இந்திய நீதித்துறை பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 'வெளிநாட்டு தலையீட்டை' இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது, ஏனெனில் இப்போது நமது பிரதமராக இருப்பது நரேந்திர மோடி ஜி." என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.