ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம்
செய்தி முன்னோட்டம்
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் அடுத்து, காலியாக உள்ள கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அவசரப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று(மார் 29) தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 151வது பிரிவை மேற்கோள் காட்டிய அவர், தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்த ஆறு மாத கால அவகாசம் உள்ளது என்றார்.
"அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மார்ச் 23 அன்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது," என்று கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவிப்பதற்கு கூடி இருந்த செய்தியாளர் சந்திப்பில் ராஜீவ் குமார் கூறினார்.
இந்தியா
இந்திய அரசியலில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாற்றம்
குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரதமர் மோடியின் குடும்ப பெயரை பற்றி தவறாக பேசியது தொடர்பான வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.
ராகுல் காந்தியை குற்றவாளி என்று குஜராத் நீதிமன்றம் அறிவித்திருப்பதால், அவரால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
வேறு ஏதாவது ஒரு உயர்நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்ப்பு கூறினால் அவரது எம்பி பதவி அவருக்கு திரும்பி வழங்கப்படும்.
அடுத்த வருடம், காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதும் தேசியத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்திய அரசியலில் இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.