
DOGE- லிருந்து எலான் மஸ்க் விரைவில் வெளியேறுவார்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவை உறுப்பினர்களிடமும், நெருங்கிய உதவியாளர்களிடமும், எலான் மஸ்க் விரைவில் அரசாங்கத்தில் தனது பங்கிலிருந்து விலகுவார் என்று கூறியுள்ளார்.
பாலிட்டிகோ அறிக்கையின்படி, டிரம்ப், DOGE துறையில் எலான் மஸ்கின் பங்கையும், முயற்சிகளையும் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
ஆனால், மஸ்க் விரைவில் தனது தொழில்களுக்குத் திரும்ப வேண்டிய நேரம் இது என்று இருவரும் முடிவு செய்துள்ளதாக, டிரம்ப்பின் உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், எலான் மஸ்க் ஒரு ஆலோசகராக "முறைசாரா பாத்திரத்தை" தக்க வைத்துக் கொள்வார் என்றும், வெள்ளை மாளிகை செயல்பாட்டில் மறைமுகமாக அவ்வப்போது தொடர்ந்து இருப்பார் என்றும் ஒரு மூத்த அரசாங்க அதிகாரி கூறினார்.
அடுத்து என்ன?
எலான் மஸ்க் வெளியேறிய பிறகு DOGE நிலை என்ன?
எலான் மஸ்க் DOGE துறையிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்ததை அடுத்து, டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் அந்த துறையின் எதிர்காலம் குறித்து பேசினார்.
திங்களன்று ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மஸ்க் இல்லாமல் DOGE தொடர்ந்து பணியாற்றுமா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "நான் அதை உங்களுக்குச் சொல்ல முடியாது," என்று கூறினார்.
DOGE உடன் பணிபுரியும் பலர் செயலாளர்களாகவும், பல நிறுவனங்களின் தலைவர்களாகவும் உள்ளனர் என்றும், அவர்கள் DOGE தொழிலாளர்களுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"அவர்களில் சிலர் DOGE மக்களை தங்களுடனேயே வைத்திருக்க முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அது முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்." என கூறினார்.