உக்ரைனில் ட்ரோன்கள் செயலிழப்பு; உக்ரைனின் ஸ்டார்லிங்க் இணைய வேகத்தை எலான் மாஸ்க் குறைத்தாரா?
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பின் வேகத்தை குறைக்குமாறு எலான் மஸ்க் நேரடியாக உத்தரவிட்டதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் அமல்படுத்தப்பட்ட இந்த வேகக் கட்டுப்பாடுகளால், உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல் மற்றும் இடைமறிப்பு ட்ரோன்கள் பல செயலிழந்ததாகவும், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கும் உக்ரைனின் திறன் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டார்லிங்க் முனையங்கள் மணிக்கு 160 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும்போது இணைய இணைப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. இணைய வேகம் குறைக்கப்பட்டதால், ரஷ்யாவின் ஜெட் வகை 'ஷாஹித்' ட்ரோன்களை தங்களால் துல்லியமாக இடைமறிக்க முடியாமல் போனதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை
இந்த விவகாரம் குறித்து டிரம்ப் நிர்வாகத்தின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஆலோசித்ததாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க அரசும், வெள்ளை மாளிகையும் இதில் நேரடியாக தலையிடவில்லை எனத் தெரிவித்துள்ளன.
ராணுவ தரத்திலான 'ஸ்டார்ஷீல்ட்' அமைப்பு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதன் பயன்பாடு மற்றும் வேகக் கட்டுப்பாடுகளை அமெரிக்க ராணுவமும் அதிபருமே தீர்மானிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர், அமெரிக்க அரசு இத்தகைய எந்தவொரு இணையக் குறைப்பு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மறுத்துள்ளனர்.
போரில் தகவல்தொடர்பு மற்றும் ட்ரோன் இயக்கங்களுக்கு ஸ்டார்லிங்க் சேவையையே உக்ரைன் பெரிதும் நம்பியிருக்கும் சூழலில் இந்த விவகாரம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.