தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு வாரங்களாக நடைபெற்று வந்த போரில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் தாய்லாந்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து பணயக் கைதிகளை விடுவிப்பது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில், கத்தாரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து தூதரக அதிகாரிகள் "பணயக் கைதிகளை அழைத்துச் செல்வதற்கான வழியில்" இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், தாய்லாந்து பணயக் கைதிகளை விடுதலை செய்ய, எகிப்து மத்தியஸ்தம் செய்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது.
எகிப்து வந்தடைந்த ஹமாஸ் விடுவித்த 13 பணயக் கைதிகள்
ஒப்பந்தத்தில் உள்ளபடி 13 இஸ்ரேல் பணயக் கைதிகளை, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்ததாக, இஸ்ரேலைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். தெற்கு காசாவில் உள்ள ரஃபா எல்லையில் செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து, இஸ்ரேலியப் பணயக் கைதிகளை எகிப்திய அதிகாரிகள் பெற்றதாக, எகிப்திய வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் இப்போது அவர்களை அரிஷ் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் இஸ்ரேலிய இராணுவ விமானத் தளத்திற்கு கொண்டு செல்வார்கள். பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு, இஸ்ரேல் மருத்துவமனைகள் அவர்களது உறவினர்களால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.