டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் பெரும் பிரச்சனையான குடியேற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து நான்கு கட்சிக் கூட்டணிக்குள் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டச்சு அரசாங்கம் நேற்று(ஜூன் 7) கலைக்கப்பட்டது. மேலும், நெதர்லாந்தை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு புதிய ஆளும் கூட்டணி தேர்ந்தெடுக்கப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது அரசாங்கம் நாட்டை கவனித்து கொள்ள இருக்கிறது. "குடியேற்றக் கொள்கையில் கூட்டணி கட்சிகள் மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பது இரகசியமல்ல" என்று ரூட்டே நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
டச்சு அரசாங்கம் நேற்று கலைக்கப்பட்டது
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று, துரதிர்ஷ்டவசமாக, அந்த வேறுபாடுகள் சரிசெய்ய முடியாதவை என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதனால்தான் நான் உடனடியாக ... முழு அமைச்சரவையின் ராஜினாமாவை அரசரிடம் எழுத்துப்பூர்வமாக வழங்க இருக்கிறேன்." என்று தெரிவித்தார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து குடியேற்றக் கொள்கை குறித்து பிரதமர் ரூட்டே பிற அதிகாரிகளுடன் விவாதித்து வந்தார். எனினும், 4 கூட்டணி காட்சிகளை அவரால் சமரசம் செய்ய முடியவில்லை. இந்நிலையில், நேற்று நடந்த இறுதி பேச்சு வார்த்தையின் போது, கூட்டணி கட்சிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளால், 4 கட்சிகளும் கூட்டணியில் ஒன்றாக இருக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்தன. இதனையடுத்து, டச்சு அரசாங்கம் நேற்று கலைக்கப்பட்டது.