பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மூன்று குழந்தைகள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. பார்னெல் சதுக்கம் கிழக்கு நகர மையத்தில், குழந்தைகள் பள்ளிக்கு வெளியே நடந்த இச்சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 5 வயது சிறுமியும் படுகாயம் அடைந்தனர். மேலும், 6 வயது சிறுமி, 5 வயது சிறுவன் லேசான காயமடைந்தனர். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கும் 40 வயது நபர், அயர்லாந்து குடிமகன் எனவும், கடந்த 20 வருடமாக அவர் அங்கு இருப்பதாகவும் பிபிசி கூறுகிறது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நபரின், தேசியம்(நேஷனாலிட்டி) குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவலே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது.
தீவிர வலதுசாரிகளால் தூண்டப்பட்ட போராட்டம்
காவல்துறைத் தலைவர் ட்ரூ ஹாரிஸ் "தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்ட முழுமையான பைத்தியக்காரப் வன்முறை" என்று குற்றம் சாட்டினார் மற்றும் சம்பவம் குறித்து பரப்பப்படும் "தவறான தகவல்களுக்கு" எதிராகவும் எச்சரித்தார். சில போராட்டக்காரர்கள், "ஐரிஷ் லைவ்ஸ் மேட்டர்" என்ற பதாகைகளுடன், பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர் வாழும் பகுதிகளில் பேரணியாக சென்றனர். நீண்ட காலமாக வீடுகள் பற்றாக்குறையால் அயர்லாந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான பரவலான அதிருப்தி அயர்லாந்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் பலர், புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதும், அவர்களுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உண்டாக்கி உள்ளது.
தாக்குதலில் தீவிரவாத நோக்கமில்லை- போலீசார்
இதன் காரணமாக வெடித்த வன்முறையில், அங்குள்ள பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டது. காவல்துறை வாகனங்கள் உட்பட சில கார்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில், பல போலீசார் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கலவரம் கட்டுக்குள் வந்தது. எத்தனை நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் வெளியாகாத நிலையில், பலர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலீசார் இது தனிப்பட்ட தாக்குதல் எனவும், இதில் எந்த தீவிரவாத நோக்கமும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.