கப்பலில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்திய 14 பாகிஸ்தானியர்கள் கைது
600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் சென்ற சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு தடுத்து நிறுத்தினர். உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், கடலோரக் காவல்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இணைந்து ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு பெரும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிலையில், போதைப்பொருளுடன், அந்த பாகிஸ்தான் கப்பலில் இருந்த 14 பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த போதைப்பொருள் கப்பலை பிடிக்க கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களை ஒரே நேரத்தில் களமிறங்கின. இந்த நடவடிக்கையில் கடலோர காவல்படையின் கப்பலான ராஜ்ரதன் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
தப்பிக்க முயன்ற போதைப்பொருள் கப்பல்
"நேற்று இரவு நடந்த ஒரு முக்கிய நடவடிக்கையில், இந்திய கடலோர காவல்படையினர் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பாகிஸ்தான் படகில் இருந்து 14 பணியாளர்களுடன் ரூ. 600 கோடி மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது," என்று கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "போதைப்பொருள் நிறைந்த கப்பல், தப்பிப்பதற்காக சூழ்ச்சி மற்றும் தந்திரங்களை கையாண்டது. எனினும், வேகமான மற்றும் வலிமையான ஐசிஜி கப்பலான ராஜ்ரதனிடமிருந்து அந்த கப்பலால் தப்பிக்க முடியவில்லை. ராஜ்ரதன் கப்பலின் சிறப்புக் குழு சந்தேகத்திற்கிடமான படகில் ஏறி, முழுமையாக சோதனை நடத்தியது. அதன் பின், அந்த கப்பலில் கணிசமான அளவு போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கடலோர காவல்படை கூறியுள்ளது.