குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா
ஜப்பானுக்கு சொந்தமான ரசாயன கப்பல் சனிக்கிழமை அன்று, இந்திய கடப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான நிலையில், அது ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி போருக்கு பின்னர், ஈரான் மீது அமெரிக்கா பகிரங்கமான குற்றச்சாட்டை வைப்பது இதுவே முதல்முறை. இந்த தாக்குதலின் மூலம் ஈரான் ஆதரவு படைகளால், வர்த்தக கப்பல்களுக்கான அச்சுறுத்தல் செங்கடலையும் தாண்டி விரிவடைந்துள்ளது. சனிக்கிழமை தாக்குதல் உள்ளூர் நேரப்படி, காலை 10 மணிக்கு நடைபெற்ற நிலையில் இதில் யாரும் கொல்லப்படவில்லை. மேலும், கப்பலில் பிடித்த தீ உடனடியாக அணைக்கப்பட்டது. அமெரிக்க இராணுவம், " இந்தியாவில் உள்ள துறைமுகத்தை அடையும் வரை, கப்பலுடன் தொடர்பிலேயே இருக்கும்" என தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவிய இந்திய கடற்படை
ட்ரோன் தாக்குதல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் (370 கிலோமீட்டர்) தொலைவில் நடந்ததாக விவரித்துள்ள அமெரிக்கா, தாக்குதல் நடைபெறும் போது அருகில் அந்நாட்டின் கடற்படை கப்பல்கள் இல்லை என தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குள்ளான எம்வி கெம் புளூட்டோ கப்பல், லிபிய கொடியுடன், டச்சுக்காரர்கள் இயக்கும், ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது என அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில், எம்வி கெம் புளூட்டோ குழுவினர் உதவிகோரிய நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு விமானம் மற்றும் கப்பல் உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் வர்த்தக கப்பல்கள்
அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கியதில் இருந்து, பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஏமனை ஆளும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை தாக்கி வருகின்றனர். இவர்கள் நவம்பர் மாத இறுதியில், ஒரு கப்பலை கடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல்களால், கப்பல்களுக்கு பெரும் சேதம் ஏற்படவில்லை என்றாலும், மார்ஸ்க், பிபி(BP) உள்ளிட்ட மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் அவ்வழியில் போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்தன.