
டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா?
செய்தி முன்னோட்டம்
முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனிருந்த உறவை மறைக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து, அவருக்கு $1,30,000 வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பணம் செலுத்தியதை மறைக்க ஆவணங்களை பொய்யாக்கியதற்காக நியூயார்க் நடுவர் மன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஆனார் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தண்டனை விவரங்கள், ஜூலை 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
மேல்முறையீடு
தான் நிரபராதி என்றும், இது தனக்கெதிரான சதி என்றும் டிரம்ப் கருத்து
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15 ஆம் தேதி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
நவம்பர் 5 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பிடனிடமிருந்து வெள்ளை மாளிகையை மீண்டும் வெல்ல முயற்சிக்கும் போது, இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
இந்த வழக்கில் அவர் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அவர் தண்டனை அறிவிக்கும் முன்னர் அவர் சிறையில் அடைக்கப்படமாட்டார்.
இந்நிலையில், டிரம்ப் தான் எந்த தவறு செய்யவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.