போரை அதிகரிக்க வேண்டாம் என ரஷ்யா அதிபரிடம் வலியுறுத்திய டொனால்ட் டிரம்ப்: அறிக்கை
அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே உலகில் நடைபெற்று வரும் போர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க போவதாக கூறி இருந்தார். அந்த வகையில் தற்போது அதிபராக வெற்றி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 7 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரு தலைவர்களும் உக்ரைனின் நிலைமை குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் மோதலை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு டிரம்ப் புடினை வலியுறுத்தினார் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. அந்த உரையாடலின் போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தயாராக இருப்பதாகவும் , அமெரிக்க-ரஷ்யா உறவுகளை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய- அமெரிக்க உறவை புதுப்பிக்க எண்ணும் புடின்
ட்ரம்ப் உக்ரைனில் போரை அதிகரிப்பதற்கு எதிராக புடினுக்கு அறிவுறுத்தினார் எனவும், அதே நேரத்தில் ஐரோப்பாவில் வாஷிங்டனின் குறிப்பிடத்தக்க இராணுவ இருப்பையும் அவருக்கு நினைவூட்டினார் என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. எனினும், அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்க-ரஷ்யா உறவுகளை மேம்படுத்துவதில் கவனத்துடன் இருப்பதாக கடந்த வாரம் ரஷ்யாவில் ஒரு பொது நிகழ்ச்சியில், புடின் தெரிவித்தார். ட்ரம்பை ஒரு "தைரியமான மனிதர்" என்றும் அவர் குறிப்பிட்டார், ஜூலை மாதம் ஒரு படுகொலை முயற்சிக்குப் பிறகு ட்ரம்ப் தன்னை எவ்வாறு கையாண்டார் என்பது தன்னைக் கவர்ந்ததாகக் கூறினார். புடினுடனான தனது அழைப்புக்கு முன், டிரம்ப் புதன்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். அப்போது அவர் போரை விரைவாக முடிப்பதாக உறுதியளித்தார்.