
அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்
செய்தி முன்னோட்டம்
தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தலாய் லாமா, அந்த எட்டு வயது சிறுவனுடன் மார்ச் 8 அன்று இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார் என்று டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
அந்த சிறுவனுக்கு தலாய் லாமா ஏதோவொரு சடங்கு நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் பிறந்த அந்த எட்டு வயது சிறுவனுக்கு ஒரு இரட்டை சகோதரர் இருப்பதாகவும், அந்த சிறுவன் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் மகன் என்றும் முன்னாள் மங்கோலிய நாடாளுமன்ற உறுப்பினரின் பேரன் என்றும் கூறப்படுகிறது.
உலகம்
1995ல் சீனாவால் கடத்தப்பட்ட 11வது பஞ்செம் லாமா
எட்டு வயது சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் மூன்றாவது உயர்ந்த லாமாவாக அறிவித்த நடவடிக்கை சீனாவை எரிச்சலடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, தனது சொந்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பௌத்த தலைவர்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்பதில் இதுவரை உறுதியாக இருந்து வந்திருக்கிறது.
இந்த செய்தி, சீனாவின் அதிருப்தியையும் அச்சுறுத்தலையும் வெளிக்கொணரும் என்று கூறப்படுகிறது.
1995ஆம் ஆண்டில், தலாய் லாமா 11வது பஞ்செம் லாமா என்று ஒருவருக்கு பெயரிட்டார்.
அப்போது, பஞ்செம் லாமா என்று பெயரிடப்பட்ட அந்த நபரையும் அவரது குடும்பத்தினரையும் சீன அதிகாரிகள் கடத்திச் சென்றனர்.
அதன் பிறகு, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.