ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று ஜோல்பாவில் கரடுமுரடாக தரையிறங்கியது. அதிபரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்பாவில் கடுமையாக தரையிறங்கியது என்பதை ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் வாகனத் தொடரணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்தன. அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றி சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கின. இந்நிலையில், அதிபரை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிகிறது.
அஜர்பைஜான் அதிபரை சந்திக்க சென்ற ஈரான் அதிபர்
மோசமான வானிலை காரணமாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியயுள்ளனர். ட்ரோன் பிரிவுகளும் அவசர நடவடிக்கைக்கு உதவி வருகின்றன. அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் ஒரு அணையைத் திறந்து வைப்பதற்காக மே 19 அன்று ரைசி அஜர்பைஜானுக்கு சென்றிருந்தார் என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. அந்த இரு நாடுகளும் சேர்ந்து அரஸ் ஆற்றின் மீது கட்டும் மூன்றாவது அணை இதுவாகும். 2023 தெஹ்ரானில் உள்ள அஜர்பைஜானின் தூதரகம் மீதான துப்பாக்கித் தாக்குதல் மற்றும் அஜர்பைஜானின் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகள் உட்பட அந்த இரு நாடுகளுக்கிடையே பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.