சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா?
இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சின் கேங், தற்கொலை அல்லது சித்திரவதையின் காரணமாக மரணமடைந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பெய்ஜிங்கில் உள்ள இராணுவ மருத்துவமனையில் ஜூலை மாத இறுதியில் சின் இறந்ததாக சீன உயர் அதிகாரிகளை அணுகக்கூடிய, இரண்டு பேர் கூறியுள்ளதாக பொலிட்டிக்கோ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவமனை, சீனாவின் உயர் பதவியில் இருக்கும் நபர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையாக உள்ளது. முன்னதாக அமெரிக்காவிற்கான தூதராக சின் இருந்தபோது, அவர் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த திவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருந்தது. மேலும் அவர், இது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்ததாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
அரசியல் எதிரிகளை களை எடுக்கும் சீன அதிபர்?
அமெரிக்காவில் சீன தூதராக இருந்த காலம் முழுவதும், சின் பத்திரிகையாளரான ஃபூ சியோதியன் உடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக, கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சி விசாரணையில் கண்டறியப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த உறவு அமெரிக்காவில் சின்னுக்கு குழந்தை பிறந்ததாகவும், பொலிட்டிக்கோ கூறுகிறது. ஜூலையில், சின் பதவிக்கு மூத்த தூதரக அதிகாரி வாங் யீ நியமிக்கப்பட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது அரசியல் எதிரிகளை தொடர்ந்து களை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கேங் மரணத்திற்கு முன்பே இது போல பல முக்கிய அதிகாரிகளின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு மர்ம மரணமும் அதில் அடங்கும்.