நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?
3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் உதவியுடன் நிலாவில் நிரந்தரக் கட்டுமானம் அமைக்க முடியுமா என சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது சீனா. நிலவில் நிரந்தரக் கட்டுமானம் என்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு தேர்ந்த திட்டமிடல் மிகவும் அவசியம். பூமியில் இருந்து பொருட்களை எடுத்து சென்று கட்டமைப்பது என்ற யோசனை சாத்தியமே இல்லாதது என அனைவருக்குமே தெரியும். நிலவில் இருக்கும் வளங்களைக் கொண்டு, 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டும் இதனை சாத்தியப்படுத்த முனைந்து வருகிறது சீனா. 3டி பிரிண்டிங் மூலம் உருவாக்கிய கற்களை, ரோபோவின் உதவியுடன் கட்டமைப்பது என்பது தான் இப்போதைக்கு சீனாவின் திட்டம். இதற்காக 'சங்அ 8' என்ற திட்டத்தை 2028-ல் செயல்படுத்தவிருக்கிறது சீனா.
சீனாவின் திட்டம் என்ன?
விண்வெளி தொழில்நுட்பங்களின் தங்களுடைய திறனை உலகிற்கு பறைசாற்றவும் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது சீனா. இதற்காக ரஷ்யாவுடனும் கைகோர்த்திருக்கிறது அந்நாடு. 2030-களில் நிலாவைச் சுற்றி வரும் ஒரு விண்வெளி நிலையம், நிலாவில் ஒரு நிரந்தரக் கட்டுமானம், நிலாவில் ஓடும் வகையிலான ரோவர்கள் மற்றும் ரோபோக்கள் என ஒரு பெரிய திட்டமே வைத்திருக்கிறது சீனா. ஆனால், அதற்கு முன்னர் முன்னேற்பாடுகளாக பல சோதனைகளையும் செய்யவிருக்கிறது. 2025-ல் சங்அ 6 திட்டத்தின் மூலம் நிலவின் மாதிரிகளைக் கொண்டு வந்து சோதனை செய்தவது. அதன் பின்னர் சங்அ 7-ன் மூலம் நிலவின் அறியப்படாத பகுதிகளில் தண்ணீர் இருக்கிறதா என்பதற்கான சோதனை செய்வது என படிப்படியாக பல திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது சீனா.