பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா
சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. "காணாமல் போன" வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வாங் யீ நியமிக்கப்பட்டுள்ளார். "சீனாவின் உயர்மட்ட சட்டமன்றம் வாங் யீயை வெளியுறவு அமைச்சராக நியமிக்க வாக்களித்தது... செவ்வாயன்று நடந்த ஒரு அமர்வில் இது தீர்மானிக்கப்பட்டது" என்று சீன ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. புதிய வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இதற்கு முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய ஒரு மாதமாகியும், அவரை இன்னும் காணவில்லை
ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாமிய அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்பில் கின் கேங் கலந்து கொண்டார். அதற்கு பிறகு, அவர் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பிய போது, உடல்நலக் காரணங்களுக்காக அவர் பணியில் இருந்து விலகியிருப்பதாக அவரது அமைச்சகம் கூறியது. ஆனால், ஏறக்குறைய ஒரு மாதமாகியும், அவரை இன்னும் காணவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக கருதப்படும் கின் கேங்கின் இருப்பு குறித்து சீன அரசாங்கமும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.