சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்களின் படி, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோனை சீன இராணுவம் தயாரித்து வருகிறது. இந்த ரகசிய ஆவணம் நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு சொந்தமானது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ஆகஸ்ட் 9 தேதியிட்ட செயற்கைக்கோள் படங்களைக் கொண்டுள்ளதாக கூறப்டுகிறது. அந்த செயற்கைக்கோள் படங்களில், கிழக்கு சீனாவின் ஷாங்காயில் இருந்து 350 மைல்(560 கிமீ) தொலைவில் உள்ள ஒரு விமான தளத்தில் இரண்டு WZ-8 ராக்கெட்-உந்துதல் உளவு ட்ரோன்கள் நிற்பது தெரிகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.
முதல் ஆளில்லா வான்வழி வாகனப் பிரிவு
ஆனால், இதன் உண்மைதன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்(பிஎல்ஏ) தனது முதல் ஆளில்லா வான்வழி வாகனப் பிரிவை நிறுவியுள்ளதாக அமெரிக்க ஆவணங்கள் கூறுகின்றன. இந்த ஆளில்லா விமானங்கள், சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளைக்கு கீழ் வருகிறது. இந்த கிழக்கு கட்டளைதான் தைவான் "பிராந்தியத்திற்கு" பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தைவான் ஒரு தனி நாடாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை தனது நாட்டின் ஒரு "பிராந்தியம்" என்று சீனா கூறி வருகிறது. இது குறித்து சீன அரசும் அமெரிக்க ராணுவமும் இதுவரை எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.