சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு
சீனாவில் இன்று(ஜன 30) காலை 5.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின்(EMSC) படி, இன்று காலை 5:49 மணிக்கு(உள்ளூர் நேரம்) அரல் என்ற பகுதிக்கு 111 கிமீ தென்கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இதுவரை பொருள் சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. கடந்த செப்டம்பர் 2022இல், மேற்கு சீனாவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 93 பேர் உயிரிழந்தனர். அறிக்கைகளின்படி, அப்போது சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மாகாணத்தில் உள்ள கன்சே திபெத்திய தன்னாட்சிப் பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டிருந்தது.
சீனாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அந்த நிலநடுக்கம் மாகாண தலைநகரான செங்டுவையும் பாதித்தது. அப்போது, அங்கிருந்த மக்கள் கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தனர். அதாவது அவர்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியே வரமுடியாமல் முன் வாசற்கதவில் வந்து கத்துவதும் தட்டுவதும் ஒரு சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. 2008ல் சிச்சுவானில் 90,000 பேரை காவு வாங்கிய 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்தான் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கம் செங்டுவிற்கு வெளியே உள்ள நகரங்கள், பள்ளிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களை மொத்தமாக அழித்தது. இதிலிருந்து மீண்டு வர சீனாவுக்கு பல வருடங்கள் ஆனது.