ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு
ரஷ்ய-உக்ரைன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் முடிகிறது. இதையொட்டி, சீனா வெளியிட்டுள்ள 12 முக்கிய புள்ளிகள் கொண்ட அறிக்கையில் அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கு முன், உக்ரைன் போரை பற்றி கருத்து கூற சீனா முற்றிலுமாக மறுத்துவிட்டது. ரஷ்யாவுடன் அளவில்லா நட்பை கொண்டிருப்பதாக கூறிய சீனா, உக்ரைன் போரை, ரஷ்ய படையெடுப்பு என்று கூற முடியாது என்று தெரிவித்திருந்தது. போரில் ரஷ்யாவுக்கு சீனா ராணுவ உதவி செய்யும் என்று அமெரிக்கா கூறி இருந்தது. அதை பெய்ஞ்சிங் முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை, சீனாவின் உயர்மட்ட அரசாங்க அதிகாரி ரஷ்யாவிற்கு சென்று தங்கள் உறவை பலப்படுத்தி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். சீனா தொடர்ந்து இந்த விஷயத்தில் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்கும். அணு ஆயுதங்களின் அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அணுசக்தி பெருக்கம் தடுக்கப்பட வேண்டும். எந்தவொரு நாடும் எந்த சூழ்நிலையிலும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை ஆராய்ச்சி செய்வது அல்லது பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சீனா அணுசக்தி பயன்பாட்டை முற்றிலுமாக எதிர்க்கிறது. எல்லோரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்கவும். பொதுமக்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள், மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்ற வேலைகளை யாரும் செய்ய வேண்டாம் போன்ற வாசங்கங்களும் அதிகமாக இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.