சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட்
உலகின் மிக பழமையான கழிப்பறையைக் கண்டுபிடித்திருப்பதாக சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை சீனா டெய்லி என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் இருக்கும் யூயாங் அரண்மனையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2,400 ஆண்டுகள் பழமையான பிளம்பிங் நினைவுச்சின்னத்தின் எச்சங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இது ஷிங் வம்சத்தால் கிமு 424 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அல்லது ஹான் வம்சத்தின் முதல் பேரரசரான லியு பேங்கால்(கிமு 206-கிபி 220) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. "சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ஃப்ளஷ் கழிப்பறை இதுவாகும்." என்று தொல்லியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர் லியு ரூய் கூறியுள்ளார். "தளத்தில் இருந்த அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் நாங்கள் அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டோம்." என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கழிப்பறையின் மேல் பகுதி இன்னும் கிடைக்கவில்லை
புதன் கிழமை வெளியிடப்பட்ட புராதன கலைப்பொருட்களின் விவரங்கள், அக்கால சுகாதார நடைமுறைகள் பற்றிய சில சுவாரசியமான தடயங்களை வழங்குகின்றன. இந்த கழிப்பறையுடன் வளைந்த ஃப்ளஷ் குழாய் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் நவீனமாக உபயோகிக்கும் கழிப்பறை போலவே இந்த கழிப்பறையும் இருந்திருக்கிறது. இந்த கழிப்பறையின் மேல் பகுதி இன்னும் கிடைக்கவில்லை என்பதால், அவர்கள் இதை எந்த மாதிரி உட்கார்ந்து பயன்படுத்தினார்கள் என்பதை ஆய்வாளர்களால் கூற முடியவில்லை. இந்த கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்த மண்ணின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதிரிகளில் மனித கழிவுகள் கிடைத்தால், அந்த கால கட்டத்தில் மக்கள் எந்த மாதிரியான உணவை உண்டார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.