காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விமானங்களுக்கு எதிரான சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவில் இருந்து புறப்பட்டு, தரையிறங்கும் ஏர் இந்தியா விமானங்கள் தகர்க்கப்படும் என, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) நிறுவனர் குர்பத்வந்த் சிங் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் சீக்கியர்கள், நவம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர், ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதை தவிர்க்க அவர் அறிவுறுத்தி இருந்தார். காலிஸ்தான் பயங்கரவாதியின் எச்சரிக்கையை தொடர்ந்து கனடா அரசு, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் ட்விட்
இச்சம்பவம் குறித்த சமீபத்திய தகவலை வழங்கிய கனேடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், கனடா ஒவ்வொரு அச்சுறுத்தலையும் "மிகவும் தீவிரமாக" எடுத்துக்கொள்கிறது என்று கூறினார். விமானங்கள் தகர்ப்பு குறித்த எச்சரிக்கையை கனடா அரசாங்கம் தீவிரமாக எடுத்துள்ளதாகவும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள் குறித்து விசாரித்து வருவதாகவும், கனடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (EAM) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பிரச்சனைகளை கனடாவிடம் எழுப்பி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற தீவிரவாத அச்சுறுத்தல்களை, இந்தியா கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானங்களுக்கு எதிரான எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துள்ள கனடா
யார் இந்த குர்பத்வந்த் சிங் ?
சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் நிறுவனரான குர்பத்வந்த் சிங், இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய காலிஸ்தானி பிரிவினைவாதி ஆவார். கனடாவில் சில மாதங்களுக்கு முன்னர் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கனடா-இந்தியா இடையே ஆன உறவில் விரிசில் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த சனிக்கிழமை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குர்பத்வந்த் சிங், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான போராட்டத்தை சுட்டிக்காட்டி, ஏர் இந்தியா விமானங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார். மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்களை பாராட்டி இருந்தார்.